திராவிடக் கட்சிகளின் முதுகுகள் போதுமா?

திராவிடக் கட்சிகளின்
முதுகுகள் போதுமா?
Published on

கிங்கா? கிங் மேக்கரா என்று கேட்டு விஜயகாந்த் கிங்காக இருப்போம் என்று சொன்னபோது, பாஜகவின் எதிர்வினைதான் ஆச்சரியப்படுத்தியது. ‘அவரை கிங் ஆக ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை’ என்றார் பாஜகவின் முரளிதர் ராவ். எப்போது அவர் நம் பக்கம் வருவார் என்று காத்திருப்பதாக பாஜக தங்களைக் காட்டிக் கொண்டது. காங்கிரசோ போன நாடாளுமன்றத் தேர்தலில் கழற்றிவிட்ட திமுக எப்போது கண் அசைக்கும், ஓடிப்போய் சேர்ந்துக்கலாம் என்று காத்திருந்து கூட்டணி போட்டுக்கொண்டது. எங்களுக்கு எத்தனை சீட் என்பதெல்லாம் முக்கியமே இல்லை என்று தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறது. தேசியக் கட்சிகளின் நிலை, தமிழ்நாட்டைப் பொருத்தவரை இதுதான்.

இந்திய அரசியலில் 1967- என்பது ஒரு திருப்புமுனை ஆண்டுதான். பல்வேறு மாநிலங்களில் தேசியக்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை இழக்க ஆரம்பித்த ஆண்டு. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியைப் பிடித்தது.  தமிழ் மொழி, அடையாள அரசியலை முன்னிறுத்திய இந்த கட்சி ஆட்சியைப் பிடித்தது ஒரே நாளில் நடந்துவிடவில்லை. இதற்குப்பின்னால் ஐம்பது ஆண்டுகால சமூகநீதி அரசியல் இருந்தது. இருபது ஆண்டு கால கட்சி அரசியல் இருந்தது.  எண்ணற்ற கல்வி கற்ற முதல் தலைமுறை குடும்ப இளைஞர்களின் உழைப்பு இருந்தது.

அண்ணா அவர்கள் மறைந்தபின்னால் 1971-ல் தேர்தல் வந்தது. அதுதான் ஒரு தேசிய கட்சியான காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இருந்த  கடைசி வாய்ப்பு. ஆனால் காங்கிரஸ், இந்திரா காங்கிரஸாகவும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸாகவும் (ஓ) பிரிந்துபோயிருந்தது. அதனால் கருணாநிதி தலைமையிலான திமுக இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த நிலையில்  பெருவெற்றி பெற்றது.  184 இடங்களை திமுக கைப்பற்றியது.  இந்திரா காங்கிரஸ் அந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடம் கூடப் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு மட்டும் அளித்தது.  இதனுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் 9 இடங்கள் மட்டுமே திமுக அணியில் வாங்கிப் பெற்று வெற்றி பெற்றது. முன்னதாக காங்கிரஸ் டெல்லியில் இரண்டாகப் பிளவுண்டபோது இந்திரா,  பிரதமர் பதவியில் நீடிக்க திமுக எம்பிகள் ஆதரவு தரவேண்டிய சூழல் நிலவியது. அதனால் தமிழ்நாட்டில் திமுக விருப்பப்படியே இந்திரா நடந்துகொண்டார்.

“மாநிலங்களில் காங்கிரசின் வீழ்ச்சி என்பது இந்திரா காந்தியின் அணுகுமுறையால் தான் தொடங்கியது. பலமான மாநில காங்கிரஸ் தலைவர்களை அவர் விரும்பவில்லை. பொம்மைகளை நியமிக்கும் பழக்கம் அவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அவரது அணுகுமுறைதான் தமிழ்நாட்டிலும் காங்கிரஸைக் காலி செய்தது” என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர்.

அதன் பின்னர் வந்த தேர்தல்களில் காங்கிரஸ் அதிமுக அணியிலேயே ஓர் இரண்டாம் கட்ட கூட்டாளியாக நீடித்தது. 1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி மட்டும் விதிவிலக்கு.

1989 சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸுக்கு இன்னொரு வாய்ப்பாக இருந்தது. அதிமுக இரண்டாகப் பிளவுண்டிருந்த நிலையில் காங்கிரஸ், மூப்பனார் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டது. ராஜிவ் காந்தி பலமுறை தமிழ்நாடு வந்து பிரச்சாரம் செய்தார். காங்கிரசைப் பொறுத்தவரை அதுவொரு சரியான திட்டம். அந்த தேர்தலில் தா பாண்டியனின் கட்சியுடன் கூட்டணி வைத்து 214 இடங்களில் காங்கிரஸ் நின்றது.  இறுதியில் தோல்வி அடைந்தாலும் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 26 இடங்களில் வெல்ல முடிந்தது.

தொடர்ந்து இதே பாதையில் சென்றிருந்தால் காட்சிகள் மாறியிருக்கலாம். ஆனால் மீண்டும் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக திமுக என்றே கூட்டணி வைத்து காங்கிரஸ் சிதைந்துபோய்விட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் என்கிற ‘சிசேரியன் பிரசவம்’ வேறு இருமுறை நடந்தது.

பாஜகவுக்கு அதன் இந்துத்துவ கொள்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லை. 1998-ல் அதிமுகவுடனும் 1999-ல் திமுகவுடனும் நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி வைத் தது அதற்கு இங்கே காலூன்ற ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுத்தது.  2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் பாஜக இடம்பெற்று நான்கு இடங்கள் வென்றது. ஆனால் அந்தக்கூட்டணி தோற்றது. அதன் பின்னர் பாஜகவை யாரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் சேர்க்க முன்வரவில்லை. அக்கட்சியுடன் மத்தியில் இணக்கமான உறவில் இருக்க அதிமுக விரும்பினாலும் கூட தேர்தல்களில் கூட்டணி சேர்த்துக்கொள்வதில்லை என்ற உறுதியில் இருக்கிறது. திமுகவும் அப்படியே. இருகட்சிகளும் தங்கள் சிறுபான்மை இன வாக்குகள் சிதறிவிடுமே என அஞ்சுகின்றன.

எனவே தான் பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் ‘அவியல்’ அணியை பாமக, மதிமுக, தேமுதிக, கொமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் இணைந்து கட்டமைத்தது. இரண்டு எம்பி தொகுதிகளையும் இந்த கூட்டணி வெல்ல முடிந்தது. ஆனால் தேர்தல் முடிந்த மறுகணமே அந்த கூட்டணி சிதறிப்போய்விட்டது. அந்த கூட்டணியைத் தொடர்ந்திருந்தால் இந்த சட்டமன்றத் தேர்தலில் அதுவொரு பலமான அணியாக இருந்திருக்கும். அதற்கான தொலைநோக்கு கொண்ட தலைமையும் அங்கு இல்லை.

“தேசியக் கட்சிகளால் தமிழ்நாட்டின் பிராந்திய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு, பொன்னியாறு, நெய்யாறு, பரம்பிக்குளம் ஆழியாறு, தென்பெண்ணை, ஒகேனக்கல் என்று எவ்வளவு பிரச்னைகள்? ஈழம், மீனவர் பிரச்னை எந்த பிரச்னையிலும் தேசியக் கட்சிகளால் தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்க முடியவில்லை. அதனால்தான் அவை இங்கே வளர்வது சுத்தமாக இயலாத நிலையாக உள்ளது” என்று கூறுகிறார் திராவிட இயக்க மூத்த தலைவர் ஒருவர்.

இவர்கள் நிலை இப்படியெனில் இடதுசாரிகள் நிலை?

மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டிராத மதறாஸ்  மாகாண சட்டமன்றத்துக்கு நடந்த முதல் தேர்தலில் (1952) இடதுசாரிகள் பெருமளவுக்கு வெற்றி பெற்றனர். 62 இடங்கள். அதற்கு அடுத்த தேர்தல் 1957-ல் வந்தது. அப்போது மதறாஸ் மாகாணம்  மொழிவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது.  இடதுசாரிகள் பெற்ற இடங்களோ 4. (அவர்கள் போட்டியிட்டது 58 இடங்கள்தான்). அடுத்த தேர்தலில்(1962) இடதுசாரிகள் பெற்றதோ வெறும் 2 இடங்கள்தாம்.

“ இதுவும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் திமுகவுடன் தொகுதி உடன்பாடு(கூட்டணிக்கு நாகரிகமான பெயராம்) செய்துகொண்டதால் கிடைத்தது” என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஆர்.முத்துக்குமார். இதற்கிடையில் கம்யூனிஸ்டு இயக்கம் இடது வலதாக உடைந்துவிட்டது. அதன்பின்னர் திராவிட அரசியல்கட்சிகளுடன் தேர்தலுக்குத் தேர்தல் கம்யூனிஸ்ட்கள் கூட்டணி வைத்து வந்திருக்கிறார்கள்.  சுயமாக காலூன்றக்கூடிய திட்டமிடல் தமிழக அரசியல் சூழலில் உருவாகவே இல்லை. அற்புதமான சில தலைவர்கள் தமிழக இடதுசாரிகளிடம் தோன்றினாலும் பரந்துபட்ட மக்கள் செல்வாக்கு என்பது இல்லாமல் போனது. (ஒருவேளை தமிழக சமூகம் முதலாளித்துவ சமூகமோ என்னவோ?)

காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகளும் தமிழ்நாட்டில் வீழ்ந்துபோன நிலையில் இருக்கின்றன. ஆனால் சுற்றிலும் இருக்கும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் தேசிய அலையே வீசுகிறது. திராவிடக் கட்சிகளின் இரும்புப் பிடியை தளர்த்தும் கனவோ எதிர்காலத் திட்டமோ இன்றி தேசியக் கட்சிகளின் தலைமைகள், இந்த திராவிடக் குதிரைகள் மீது சவாரி செய்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டன.

எனவே இன்னும் பல தேர்தல்களுக்கு டெல்லிவாலாக்களுக்கு இங்கே அனுமதி நஹி!

மார்ச், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com